பதிவு செய்த நாள்
10
மார்
2020
11:03
ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை, மூன்று மாநில பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த பிப்., 5ல், பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 3ல் கொடியேற்றத்தை தொடர்ந்து, மலை உச்சியிலிருந்து, அடிவாரத்தில் உள்ள கல்யாணசூடேஸ்வரர் கோவிலுக்கு உற்சவமூர்த்திகள் அழைத்து வரப்பட்டனர். அன்று முதல் நாள்தோறும் இரவில், சிம்ம வாகனம், மயில், நந்தி, நாகம், ரிஷபம் மற்றும் யானை வாகனத்தில் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது. பின், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேரில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டனர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பிரபாகர், ஆர்.டி.ஓ., குமரேசன், முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். விநாயகர் தேர் முன்னால் செல்ல, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை அம்மன் தேர்கள் பின் தொடர்ந்தன. மூன்று தேர்கள் மீதும், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உப்பு, வாழைப்பழம் ஆகியவற்றை வீசி, சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர்கள், மாலையில் நிலையை அடைந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, நகர் முழுவதும் ஆங்காங்கே அன்னதானம், மோர் வழங்கப்பட்டன. தேரோட்டத்துக்காக, உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. விழாவில் இன்றிரவு, 10:00 மணிக்கு பல்லக்கு உற்சவமும், நாளை இரவு, 7:00 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது.