பதிவு செய்த நாள்
10
மார்
2020
11:03
கிருஷ்ணகிரி: கோதண்டராம சுவாமி தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே, பூதிமுட்லு கிராமத்தில் உள்ள கோதண்டராம சுவாமி தேர்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி கோதண்டராம சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பளித்தார். சுவாமியை தேரில் வைத்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவின்போது, பல அமைப்புகளை சேர்ந்தவர்கள், பக்தர்களுக்கு இலவச உணவு, மோர், தண்ணீர் போன்றவற்றை வழங்கினர். திருவிழாவில், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழா மூன்று நாட்கள் நடப்பதால், இன்று, ஆஞ்சநேயர் சுவாமி தேர்திருவிழாவும், நாளை பல்லக்கு உற்சவமும் நடக்க உள்ளது. தேர்த்திருவிழாவில் போலீசார் பாதுகாப்பில் இல்லாததால், தேரை வடம் பிடித்து இழுத்து செல்வதில், தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற இத்திருவிழாவில், இரண்டு போலீசார் மட்டும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்ததால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.
நரசிம்ம சுவாமி கோவில்: தேன்கனிக்கோட்டை யில் உள்ள கவி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், 16ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 28ல் துவங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா இஸ்கான் கீர்த்தனை, இரவு, 7:30 மணிக்கு கஜேந்திர மோட்சம் நடந்தன. நேற்று காலை, 12:20 மணிக்கு தேரோட்டம் நடந்தது. கோவிலின் முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரை, தமிழகம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். விழாவில் இன்றிரவு, 12:00 மணிக்கு, முத்து பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. தளி அடுத்த கும்ளாபுரம் நரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஊர் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரை, தமிழகம், கர்நாடகா மாநில பக்தர்கள் வழிபட்டனர்.