பதிவு செய்த நாள்
10
மார்
2020
11:03
சென்னை, வடபழநி முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில், பாலாலயப் பிரதிஷ்டை, நாளை மறுநாள் நடக்கிறது.
சென்னைக்கு மேற்கே, வடபழநியில் அமைந்துள்ளது முருகன் கோவில். 1890ம் ஆண்டு, எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன், இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது.முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர், தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டார். நோய் தீர முருகன் கோவில்களை தரிசித்து வந்தார். தென்பழநி சென்றபோது, சாது ஒருவர் கூறியபடி, வடபழநியில் முருகன் உருவப்படத்தை வைத்து வழிபட்டார்.இதையடுத்து, பாவாடம் தரிப்பது எனும், நாக்கை அறுத்து, முருகனுக்கு காணிக்கை செலுத்தியதால் குணம்அடைந்தார். நாளடைவில், அந்த இடத்தில் முருகப் பெருமானின் தெய்வீக சக்தியை உணர்ந்தார்.
அவரின் அருள்வாக்கு படி, மக்கள் வடபழநி ஆண்டவரை வழிபட்டு தீர்வு கண்டனர்.அண்ணாசாமிக்கு பின், அவரின் சீடரான ரத்தினசாமி செட்டியார் என்பவரால், 1865ம் ஆண்டு தென்பழநியில் உள்ளது போல, சிலை செய்யப்பட்டு கோவில் நிர்மாணிக்கப்பட்டது.பின், குருவைப் போலவே, ரத்தினசாமி செட்டியாரும், பாவாடம் தரித்து அருள்வாக்கு கூறினார். அவரை தம்பிரான் என, பக்தர்கள் அழைத்தனர்.தற்போது, உள்ள கர்ப்பக்கிரஹம், உட்பிரஹாரம் மற்றும் கருங்கல் மண்டபம் ஆகியவை, ரத்தினசாமி சீடரான பாக்கியலிங்கத் தம்பிரான் காலத்தில் கட்டப்பட்டவை. பின், 1920ல் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 1972ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இக்கோவிலை நிர்மாணித்த மூவரின் சமாதியும், நெற்குன்றம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. அங்கும் ஆலயம் கட்டப்பட்டு, பவுர்ணமி, குரு பூஜைகள் விமரிசையாக நடத்தப்படுகின்றன.தனி சன்னிதிகள்வடபழநி முருகன் கோவிலில், மூலவர் பழநி முருகன் நின்ற கோலத்தில், காலில் பாதரட்சைகளுடன் அருள்பாலிக்கிறார்.
நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கென்று, இங்கு தனி சன்னிதி உள்ளது. வரசித்தி விநாயகர், சொக்கநாதர், மீனாட்சி அம்மன், காளி, பைரவர் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னிதிகள் உள்ளன.மேலும், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் சன்னிதிகளும் உள்ளன. பல முருகன் கோவில்களில் இல்லாத, மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் சன்னிதியும் இங்கு உண்டு. இந்த கோவிலின் முன்புற ராஜ கோபுரத்தில், கந்த புராணக் காட்சிகள் வண்ணமயமாக விளக்கப்பட்டுள்ளன. முகப்பில் திருக்குளம் அமைந்துள்ளது. விழாக்காலங்களில், தெப்போற்சவம் நடத்தப்படுகிறது.கிழக்கு கோபுரம், 40.8 மீட்டர் உயரம் கொண்டது. இதில், 108 பரதநாட்டிய நடன அசைவுகள் காணப்படுகின்றன.
இக்கோவிலின் தல விருட்சமாக, அத்தி மரம் உள்ளது.இக்கோவில், திருமணங்களுக்கும் மத சொற்பொழிவுகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு விசாலமான மண்டபத்தைக் கொண்டுள்ளது. கோவில் வழிபாடுஇக்கோவிலில் அதிகாலை, 5:30 மணிக்கு வழிபாடு துவங்குகிறது. அதைத் தொடர்ந்து, 6:30 மணிக்கு காலசந்தி பூஜை; முற்பகல், 11:00 மணிக்கு, உச்சிக்கால பூஜை; மாலை, 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை மற்றும் இரவு 9:00 மணிக்கு அர்த்தசாம பூஜை. இது செவ்வாய், வெள்ளியில் இரவு, 9:30 மணிக்கு நடக்கிறது. திருவிழாக்கள்இங்கு, 12 மாதங்களிலும், விழாக்கள் நடைபெறுகின்றன.
அதில், வைகாசி விசாகத் திருவிழா, 11 நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மற்றும் ஆடிக் கிருத்திகையில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்படுகிறது.ஐப்பசி மாதத்தில், 11 நாட்கள் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம், லட்சார்ச்சனையுடன் நடக்கிறது. மார்கழி மாதத்தில், ஆருத்ரா தரிசனமும், மாணிக்கவாசகருக்கு ஒன்பது நாட்கள் உற்சவமும் நடைபெறுகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் நடக்க உள்ளன. இதற்கான பாலஸ்தாபன விழா, 12ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, நாளை காலை, 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, பிரதிஷ்டா சங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, மாலை யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. பாலஸ்தாபன நாளான, 12ம் தேதி, அதிகாலை, 5:50 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.அதைத் தொடர்ந்து, காலை, 8:00 மஹா பூர்ணா ஹூதியும், காலை, 8:30 மணிக்கு பாலாலய பிரதிஷ்டையும் நடக்கிறது. காலை, 9:15 மணிக்கு திருப்பணிகள் துவங்குகின்றன.பாலாலய பிரதிஷ்டையை பக்தர்கள் பார்வையிடுவதற்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், கோவில் துணைக் கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துஉள்ளனர்.