காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள கள்ளிக்குடியில், சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட, சிவன் கோயிலை கிராம மக்கள் மீட்டெடுத்து வருகின்றனர்.
திருத்தங்கூர் அருகே உள்ள கள்ளிக்குடியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவ்வூரின் எல்லைப்புறத்தில், பல நுாற்றாண்டுக்கு முந்தைய திருவேலங்கொண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கற்களால் ஆன இக்கோயில், பழங்கால அமைப்பை பெற்றுள்ளது. கோயிலைச் சுற்றிலும் கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மூலவராக திருவேலங்கொண்டேஸ்வரர் இருக்கிறார். தவிர, கோயிலின் மண்டபங்கள் முற்றிலுமாக சிதைந்த நிலையில், சிலைகளும் உடைந்த நிலையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. இக்கோயிலின் தொன்மை குறித்து அறியப்படவில்லை. பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் இருக்கும் இக்கோயில் குறித்து அறிந்த கைங்கர்யம் டிரஸ்ட் அமைப்பினர் இக்கோயிலை மீட்டெடுக்க நினைத்தனர். கள்ளிக்குடி மக்களின் ஒத்துழைப்போடு, முழுவதுமாக சிதிலமைடந்த கோயிலை புனரமைப்பு செய்து வருகின்றனர்.