பதிவு செய்த நாள்
04
மே
2012
11:05
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில், சித்திரைத் திருவிழாவின், 11ம் நாளான நேற்று, பக்தர்கள் வெள்ளத்திற்கு இடையே, தேரோட்டம் நடந்தது. இக்கோவில் சித்திரைத் திருவிழா, ஏப்., 23ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்., 30ல், அம்மனுக்கு பட்டாபிஷேகமும், நேற்று முன் தினம் திருக்கல்யாணமும் நடந்தது.
ரதரோஹண பூஜை : நேற்று தேரோட்டம் என்பதால், உச்சிக்கால பூஜை வரையுள்ள அனைத்து பூஜைகளும், அதிகாலை 3 மணிக்குள் செய்யப்பட்டன. சித்திரைத் திருவிழாவிற்கென காப்பு கட்டிய மோகன் பட்டர், அதிகாலை, 4 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களுக்கு, ரதரோஹணம் பூஜை செய்தார். எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும், தேர்களை புனிதப்படுத்தவும் இப்பூஜை நடத்தப்பட்டது. தேர்களை பாதுகாக்கும் தேரடி கருப்பு சாமிக்கு, அதிகாலை, 5 மணிக்கு பூஜை செய்து, சுவாமியையும், அம்மனையும், தேர்களில் எழுந்தருள செய்தனர். கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி ஜெயராமன், போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், துணை கமிஷனர் திருநாவுக்கரசு ஆகியோர், வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
பூசணிக்காய் பலி : சக்கரங்களுக்கு, பூசணிக்காய் பலி கொடுத்து, "ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா... என, பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே, சுவாமி தேர், காலை, 6 மணிக்கு புறப்பட்டது. வடத்தை மெதுவாக இழுக்குமாறு அறிவிக்கப்பட்டது. ஆடி அசைந்து விளக்குத் தூண் சந்திப்பிற்கு சுவாமி தேர் வர, காலை, 6.45 மணியானது. பின், சுவாமி தேரை இழுத்த பலர், அம்மன் தேரை, காலை, 7.20 மணிக்கு இழுத்து வந்தனர். மாசி வீதிகளில் வலம் வந்து, காலை, 11.50 மணிக்கு சுவாமி தேரும், மதியம் 12 மணிக்கு அம்மன் தேரும், அடுத்தடுத்து நிலைக்கு வந்தன.
சப்தாவர்ண சப்பரம் : கடந்த, 10 நாட்களாக அம்மனும், சுவாமியும், தனித் தனி வாகனங்களில் உலா வந்தனர். ஒரே நேரத்தில், பக்தர்கள் தங்களை தரிசிக்க வேண்டும் என்பதற்காக, நேற்றிரவு, 8 மணிக்கு சப்தாவர்ணச் சப்பரத்தில் உலா வந்தனர். இதை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்தனர். கோவிலுக்கு திரும்பிய பின், கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, கோவில் பொற்றாமரைக் குளத்தில், தேவேந்திர பூஜையுடன், 12 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.
வெளிநாட்டினர் பங்கேற்பு : தேரோட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் இருந்து அதிக பயணிகள் வந்திருந்தனர். முதல் முறையாக தேரோட்டத்தை பார்த்த இவர்கள் வியந்து பாராட்டினர். சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, தேரோட்டத்தை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.