மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழாவை யொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. கடந்த 25ந் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.நேற்று காலை 9 மணிக்கு சுவாமி, பிரியாவிடையுடன் கோவிலுக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளினார். சிறிய தேரில் முருகன் வள்ளி தெய்வானையுடனும், விநாயகப் பெருமானுடனும், அம்மன் பெரிய தேருக்குப் பின்னால் உள்ள சிறிய தேரிலும் எழுந்தருளினர். பின்னர் தேரோட்டம் காலை 10.40 மணிக்கு தொடங்கி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. பேரூராட்சி தலைவர் ஜோசப்ராஜன், துணைத்தலைவர் காளீஸ்வரி,செயல் அலுவலர் மருது உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் விழா வரும் 6ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.