பதிவு செய்த நாள்
15
மார்
2020
05:03
தஞ்சாவூர்: அறநிலையத் துறை கமிஷனர், பணீந்திர ரெட்டி, அனைத்து கோவில்களிலும், கொரோனா விழிப்புணர்வு அறிவிப்புகள் வைக்க வேண்டும். கோவில்களில், அடிக்கடி கிருமி நாசினி மருந்துகளை தெளிக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு, சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். ஆனால், கொரோனா வைரஸ் கண்டறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறநிலையத் துறை, தொல்லியல் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில், இதுவரை எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. அதே நேரம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர், கோவிலுக்கு முகக்கவசத்துடன் வருகின்றனர். பிரான்ஸ் சுற்றுலா பயணியர் கூறியதாவது:கேரளாவில் தங்கும் விடுதிகளில், வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை எனக் கூறி விட்டதால், 10 நாட்கள், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், முகத்தில், மாஸ்க் அணிந்துள்ளோம். ஆனால், இங்கு பலரும் மாஸ்க் இல்லாமல் வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பெரிய கோவிலுக்கு கல்விச் சுற்றுலாவாக, நேற்று பள்ளி மாணவர்கள் பலர் வந்திருந்தனர். கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல், அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.