பதிவு செய்த நாள்
16
மார்
2020
01:03
சென்னை:கொரோனா வைரஸ் பீதி காரணமாக, வடபழநி ஆண்டவர் கோவிலில், நவீன தெர்மா மீட்டரில், பரிசோதனை செய்த பின்னரே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, சுகாதாரத் துறை சார்பில், சென்னையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.சீனாவில் உருவெடுத்த, கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்தையும் பாதித்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க, சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னை மாநகராட்சி சார்பில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குறிப்பாக, மால், திரையரங்கு, வங்கி, தேவாலயங்கள், ஏ.டி.எம்., போன்ற பகுதிகளில், தொற்று உண்டாவதை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.நேற்று, கோவில்கள், தேவாலயங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்னதாக, இருக்கைகள், சுவர், கைப்பிடி போன்ற பகுதிகளில், கிருமி நாசினி போட்டு துடைக்கப்பட்டது. பல தேவாலயங்களில், கிருமி நாசினி கொடுத்து, கையை சுத்தம் செய்த பின் தான், பக்தர்களை அனுமதித்தனர். மால்கள், திரையரங்குகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இருக்கைகள், கைப்பிடிகள் கிருமி நாசினி போட்டு துடைக்கப்பட்டது.மேலும், மால்கள், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளும் வழங்கினர்.
வடபழநி ஆண்டவர் கோவிலில், நேற்று முதல், நவீன தெர்மா மீட்டர் கொண்டு, கோவில் நுழைவாயிலிலேயே, பக்தர்கள் பரிசோதிக்கப்படுகின்றனர்.எந்த பிரச்னையும் இல்லாத நிலையில், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடபழநி கோவில் நிர்வாகம், இந்த பரிசோதனையை செய்து வருகிறது.