திருப்பரங்குன்றம் : கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கை, முகம் கழுவிய பின் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலுக்கு வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்களுடன் வெளிநாட்டு பயணிகளும் அதிகம் வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நேற்று முன் தினம் மாலை முதல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் டிக்கட் கவுன்டர் அருகே சோப்பு திரவம் மூலம் கைகள், முகம் கழுவிய பின் கோயிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நிர்வாகம் சார்பில் தண்ணீர், சோப்பு திரவம் வழங்கப்படுகிறது. மேலும் கோயில் மண்டபங்களில் இரு முறை கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. முன் மண்டபத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சலில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.