பதிவு செய்த நாள்
19
மார்
2020
10:03
வீரபாண்டி: எருதாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோவிலைச்சுற்றி, காளைகளை, மக்கள் அழைத்து வந்தனர்.
பங்குனியில், கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம், அரியானூர், வீரபாண்டி உள்ளிட்ட ஊர்களில், மாரியம்மன் திருவிழா நடத்தப்படும். அப்போது, கோவில் காளைகள் மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து அழைத்து வரப்படும் காளைகளை, கோவிலை சுற்றி வலம் வரச்செய்து எருதாட்டம் நடத்தி, திருவிழா தொடங்கும். நடப்பாண்டு, கொரோனா வைரஸ் தாக்கத்தால், எருதாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், உத்தமசோழபுரம், மாரியம்மன் கோவிலில், நேற்று, கோவில் காளைகள், மேலும், ஐந்து காளைகளை குளிப்பாட்டி அலங்கரித்து, வட கயிறுகள் கட்டி, கஞ்சமலை அடிவாரத்திலிருந்து, மேள, தாளம் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து, கோவிலை சுற்றி வலம் வரச்செய்து, அம்மன் முன் நிறுத்தி பூஜை போட்டனர். பின், பூச்சாட்டுதலுடன் பங்குனி திருவிழா தொடங்கியது. வரும் ஏப்., 1ல் கூழ் வார்த்தல், 2ல் அலகு குத்துதல், பூங்கரகம், அக்னி கரகம், பொங்கல் வைத்தல், 3ல் வண்டி வேடிக்கை, சத்தாபரணம், 4ல் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடையும்.