பதிவு செய்த நாள்
19
மார்
2020
03:03
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வட்டாரத்தில் தொன்மை வாய்ந்த சமண தடயங்கள் நிறைந்து காணப்படுகிறது என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், வீரமடை, விளந்தை, வீரசோழபுரம், வீரபாண்டி, ஜம்பை, ஜ.சித்தாமூர், சாங்கியம், நெடுமுடையான், சிவனார்தாங்கல், சோழவாண்டியபுரம், பனப்பாடி, கோமாளூர், சந்தப்பேட்டை, தொட்டி, பூமாரி, அருதங்குடி போன்ற கிராமங்களில் சமணர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெறுகிறது.
இதுபற்றி ஆய்வு செய்யும் சமண வரலாற்று ஆர்வலர் பேரணி ஸ்ரீதரன் திருக்கோவிலூர் அடுத்த எடையூரில் மகாவீரர் சிற்பம் இருப்பதை கண்டறிந்து ஆய்வு செய்துள்ளார். இதுபற்றி ஸ்ரீதரன் கூறியிருப்பதாவது. எடையூர் கிராம குளக்கரையில் தொன்மைவாய்ந்த மகாவீரர் சிற்பம் ஒன்று பராமரிப்பு இல்லாமல் உள்ளது. உருவ அமைதியை நோக்குகையில் கி.பி. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால சோழர் ஆட்சியில் உருவாக்கப் பட்டிருக்கலாம். பீடத்தில் இருந்து 122 செமீ உயரமும், 68 செ.மீ., நீளமும், 21 செ.மீ., அகலமும் கொண்ட கல்பலகையில் வடிக்கப்பட்டுள்ளது. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பதை சுட்டிக்காட்டும் முக்குடை, அதன்மேல் கற்பக மரம், இருபுறமும் சாமரம் வீசுவோர், முதுகின் பின்புறம் திண்டு இவற்றுடன் அர்த்தபரியங்காசன தியான நிலையில் மகாவீரர் புன்னகை முகத்துடன் அமைதியாக காட்சி தருகிறார். யாளி என அழைக்கப்படும் கற்பனை உருவங்கள் மூன்றினை பீடமாகக் கொண்டு தவக்கோலத்தில் உள்ள இந்த சிற்பம் பழமைவாய்ந்த சமண வரலாற்றை எடுத்துரைப்பதாக உள்ளது. திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள இத்தகைய தொன்மையான வரலாற்றுப் பொக்கிஷங்களை பாதுகாப்பிடம் அமைத்து பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு ஸ்ரீதரன் கூறியுள்ளார்.