திருப்பதி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தற்காலிக தடை விதித்து கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனையடுத்து கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பினர். திருப்பதிக்கு வந்த வடஇந்திய பக்தருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆந்திர அரசிடம் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனையின் முடிவில் ஆகம விதிக்கு புறம்பாக இல்லாதவாறு முடிவு செய்யும்படி ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஏழுமலையான் கோயில் மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், ஏகாந்தமாக அனைத்து பூஜைகளும் நடைபெறும் எனவும், தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைபாதை, அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மார்கங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் அளித்து அவர்களையும் உடனடியாக திருப்பதிக்கு அனுப்பும் பணியில் இறங்கியுள்ளனர்.