பதிவு செய்த நாள்
21
மார்
2020
01:03
திருப்பதி : திருமலைக்கு பக்தர்கள் செல்வது தடுக்கப்பட்டதால், ஏழுமலையான் கோவில் வெறிச்சோடியது.
திருப்பதி திருமலைக்கு வந்த பக்தர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறி தென்பட்டதால், திருமலைக்கு செல்ல பக்தர்களுக்கு, தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது. திருமலையில் தங்கியிருந்த பக்தர்கள் அனைவரும், நேற்று மதியம், 12:00 மணிக்குள், தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு, கோவில் மூடப்பட்டது.அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும், கோவிலுக்குள் உள்ள, படிகாவலி அருகே, முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஏழுமலையானுக்கு தினமும் நடக்கும் கைங்கரியங்கள், ஆகம விதிப்படி எவ்வித குறைவும் இல்லாமல் நடக்கும் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.பக்தர்கள் கூட்டத்தால் எப்போதும் சூழ்ந்திருக்கும் திருமலை, நேற்று முதல் வெறிச்சோடி களையிழந்து காணப்படுகிறது. திருமலைக்கு செல்லும் மலைப்பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட நடைபாதை மார்க்கங்களும் மூடப்பட்டுள்ளன.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களிலும், பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. காளஹஸ்தி கோவிலும் மூடல்ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலில், ஆண்டு முழுவதும், ராகு - -கேது பரிகார பூஜை, எவ்வித தடங்கலும் இல்லாமல் நடந்து வரும். கோவிலில் முக்கிய உற்சவங்கள் நடந்தாலும், மகா சிவராத்திரி நாளிலும், கோவில் நிர்வாகம் பரிகார பூஜையை ரத்து செய்ததில்லை. ஆனால், கொரோனா வைரஸ் அச்சத்தால், காளஹஸ்தி கோவில் மூடப்பட்டதுடன், ராகு - கேது பரிகார பூஜையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குருக்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று, ஆறு கால பூஜைகளையும் விடாமல் செய்து வருகின்றனர். இதனால், மூடிய கோவிலை தான், பக்தர்கள் பார்த்து செல்கின்றனர்.