உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒன்றியம் கல்லுாத்து ஊராட்சி கே.பெருமாள்பட்டியில் விளைந்த மல்லிகை பூக்களை மதுரை உள்ளிட்ட இடங்களில் மார்க்கெட் மூடப்பட்டதால் விநாயகருக்கு விவசாயிகள் காணிக்கையாக்கின்றனர். இங்கு 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மல்லிகை சாகுபடியில் ஈடுபடுகின்றனர். தினமும் விளையும் மல்லிகையை மதுரை, உசிலம்பட்டி, திண்டுக்கல் அணைப்பட்டி பூ மார்க்கட்டிற்கு அனுப்புவர். நேற்று கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடந்த மக்கள் ஊரடங்கால் பூ மார்க்கெட்கள் மூடப்பட்டன. இதனால் நேற்று அதிகாலை பறித்த மல்லிகையை விவசாயிகள் அங்குள்ள விநாயகருக்கு காணிக்கையாக்கின்றனர். விவசாயி மணிகண்டன் கூறுகையில், ‘சுவாமிக்கு மல்லிகையை காணிக்கை செலுத்த மக்கள் ஊரடங்கு உதவியது. பறித்த மல்லிகையை 15 மணி நேரத்திற்கும் மேல் பாதுகாக்கவும் முடியாது. பதப்படுத்தவும் இப்பகுதியில் வசதிகள் இல்லை,’’ என்றார்.