பதிவு செய்த நாள்
24
மார்
2020
04:03
மேட்டுப்பாளையம்: ஊட்டி சாலையில் உள்ள, மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் விழா, கொரோனா தடுப்பு நடவடிக்கை அடுத்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலை காந்தி மைதானத்தில், மிகவும் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் குண்டம் விழாவும், ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவும் ஒரே நாளில் நடைபெறும். இவ்விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர். இக் கோவிலின், 92 ம் ஆண்டு குண்டம் திருவிழா, இன்று பூச்சாட்டுடன் துவங்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. 31 ம் தேதி கம்பம் நடுதல், ஏப்., 2-ம் தேதி கொடியேற்றமும், 6 -ம் தேதி குண்டம் திறப்பும், 7 ம் தேதி குண்டம் இறங்குதல், 8 ம் தேதி தேரோட்டமும், 9 ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 10 ம் தேதி மஞ்சள் நீராட்டும், 12 ம் தேதி பால்குடம் எடுத்தலும், 13ஆம் தேதி மறுபூஜை என, விழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை அடுத்து, குண்டம் திருவிழாவை, கோவில் நிர்வாகம் தள்ளிவைத்துள்ளது. இந்த தள்ளிவைப்பு குறித்து, கொரோனா வைரஸ் காரணமாக, தமிழக அரசு உத்தரவுப்படி, இந்த ஆண்டு நடைபெற உள்ள குண்டம் தேர் திருவிழா, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும், என்ற அறிவிப்பு பிளக்ஸை, கோவில் நிர்வாகத்தினர் கேட்டில் கட்டி வைத்துள்ளனர்.