செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் சார்பில் சாலையோரம் ஆதரவற்று தவிக்கும் 500 பேருக்கு தினமும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பல இடங்களிலும் சாலையோரங்களில் தங்கியிருந்தவர்கள், தினசரி கூலி வேலைக்கு சென்று வந்தவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க ஆங்காங்கே நல்ல உள்ளங்களும், சமூக அமைப்புகளும் களமிறங்கி உள்ளனர். இவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இதேபோன்று மேல்மலையனூரில் ஏரிக்கரை, அக்னி குளம் மற்றும் நரிக்குறவர் குடியிருப்பில் 500 பேர் வரை உணவின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அவரவர் இருப்பிடங்களுக்கு சென்று தினமும் உணவு வழங்க உள்ளனர் நேற்று இதை இந்துசமய உதவி ஆணையர் ராமு துவக்கி வைத்தார். அறங்காவலர் குழு தலைவர் சரவணன் அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், வடிவேல், சந்தானம் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றவர்களுக்கு வழங்குவதற்காக தாசில்தார் செந்தில் குமாரிடம் நாலு முட்டை அரிசியை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கினர்.