பதிவு செய்த நாள்
30
மார்
2020
03:03
சென்னை:கொரோனாவை விரட்ட, வீடுகளின் முன், ஜாதி, மத, பேதம் இல்லாமல், வேப்பிலை கட்டி, மஞ்சள் தண்ணீர் தெளிப்பது அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில், பெரும்பாலான கிராமங்களிலும், நகரங்களிலும், பொது மக்கள், தங்கள் சுற்றுப்புற பகுதிகளை, துாய்மையாக வைத்திருக்க, பல்வேறு வழிகளை கையாளுகின்றனர். இந்த வரிசையில், வேப்பிலையை அரைத்து, அவற்றை வீட்டின் முன் தெளிப்பது, மஞ்சள் கலந்த வேப்பிலை ஊற வைக்கப்பட்ட நீரை, வீட்டின் முன்பும், சாலைகளிலும் தெளிப்பது, வீட்டின் முன்பும், பின்பும், வேப்பிலையை வாயிலில் கட்டி வைத்திருப்பது போன்ற, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.குக்கிராமங்களில், ஆடி மாதங்களில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்த, இந்த வழக்கம், தற்போது நகரப் பகுதிகளிலும், ஜாதி, மத, பேதம் இல்லாமல், பல இடங்களுக்கும் பரவிஉள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வேப்பிலை, ஒரு வகை கிருமி நாசினி தான். அதை அரைத்து தெளிப்பதும், மஞ்சள் தண்ணீரை தெளிப்பதும் நல்லது தான். ஆனால், மிக கொடிய நோயான, கொரோனாவை, அதனால் மட்டும் தடுக்க முடியாது. சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
கிருமி நாசினி: கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினியால் சுத்தமாக கழுவ வேண்டும்; கண்ட இடங்களில் தொடுவதை தவிர்க்க வேண்டும்.பெரும்பாலான ஊர்களில், தெருக்களிலும், சில வீடுகளிலும், ௧௦ பேர் வரை ஒன்று கூடி, கதை பேசுவது, அரட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது, கொரோனா வைரஸ் பரவலுக்கான வாய்ப்பை உருவாக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.