பதிவு செய்த நாள்
07
மே
2012
10:05
கூடலூர்: வழக்கமான கெடுபிடி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், இரு மாநில எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில், சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.தமிழக, கேரள எல்லைப்பகுதியான கூடலூர், குமுளி அருகே வண்ணாத்திப்பாறை மலை உச்சியில், மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. சித்ராபவுர்ணமி விழாவிற்காக, நேற்று தமிழக, கேரள பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக ஜீப்பிலும், நடந்தும் வந்தனர். தமிழகப் பகுதியான பளியன்குடியில் இருந்து, வனப்பகுதி வழியாக ஏராளமான பக்தர்கள் நடந்து வந்தனர். காலையில் இருந்தே நீண்ட கியூவில் நின்று, கண்ணகியை வழிபட்டனர்.பள்ளி உணர்த்தல், மலர் வழிபாடு, யாக பூஜை, மங்கல இசை, பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. மங்கலதேவி கண்ணகி பச்சைபட்டு உடுத்தி, சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பம் இட்டு யாக பூஜை நடந்தது. பெண்களுக்கு மங்கல நாண், வளையல், பக்தர்களுக்கு அவல் பிரசாதம், பொங்கல் வழங்கப்பட்டன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.முல்லைப் பெரியாறு பிரச்னை எதிரொலியாக, இக்கோவில் விழாவில் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதற்காக, கேரள தரப்பில் 470 போலீசாரும், தமிழக தரப்பில், 350 போலீசாரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். குமுளியில், மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த பின்பே பக்தர்களை, கோவிலுக்குள் செல்ல அனுமதித்தனர்.தேனி கலெக்டர் பழனிச்சாமி, இடுக்கி சப்-கலெக்டர் வெங்கடேசபதி, மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் உட்பட, பலர் பங்கேற்றனர். பூம்புகார், ஓசூர், கும்பகோணம், ராமேஸ்வரம், திருப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
பாரபட்சம்: காலையில் தமிழக பக்தர்கள் பொங்கல் வைக்க துவங்கியபோது, கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். அதே வேளையில், கேரள பக்தர்கள் மட்டும் பொங்கல் வைத்தனர். கடந்த ஆண்டு, தமிழக பக்தர்கள் பொங்கல் வைத்த வீடியோ ஆதாரத்தை காட்டிய பின் அனுமதித்தனர். கூடுதலான ஜீப் வசதி ஏற்படுத்தாததால், குமுளியில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து, ஜீப்பில் சென்றனர். வழக்கத்தை விட இந்த ஆண்டு, குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லும் ஜீப் பாதை நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் நடந்து வரும் பாதையில், பல இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.