பதிவு செய்த நாள்
06
ஏப்
2020
12:04
கோவை: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, கோவை, நீலகிரி, திருப்பூரில், லட்சக்கணக்கான மக்கள் நேற்று இரவு தீபம், மெழுகுவர்த்தி ஏற்றியும், மொபைல் போன் டார்ச் மூலம் வெளிச்சம் பாய்ச்சியும், தங்கள் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர்.
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரசை தோற்கடிக்கும் விஷயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டிய நேரம் இது. ஏப்.,5ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, 9 நிமிடங்கள், மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, தீபம், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மொபைல் போன் விளக்குகளை ஒளிரவிட்டு, நம் வலிமையை காட்ட வேண்டும் எனக்கூறினார்.
அவரது வேண்டுகோளை ஏற்று, நேற்று இரவு 9:00 மணிக்கு கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில், லட்சக்கணக்கான மக்கள், வீடுகளில் விளக்கேற்றினர். மெழுகுவர்த்தி ஏற்றியும், மொபைல் போன் டார்ச் மூலம் வெளிச்சம் பாய்ச்சியும் தங்கள் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர்.கோவை மாநகரில், சரியாக இரவு 9 மணிக்கு அனைத்து வீடுகளிலும், மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, தீபங்கள் ஒளிர்ந்தது கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது.
இந்நிகழ்வுக்கு பொருந்தும் வகையில், கோவையில் நேற்றிரவு, விளக்குகள் அணைக்கப்பட்ட நேரத்தில் நிலவை சுற்றிலும் ஒளிவட்டமும் தென்பட்டது. பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, உடுமலை, திருப்பூர், பல்லடம், அவிநாசி, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார், பந்தலுாரிலும், இதேபோன்று மக்கள் விளக்கேற்றியும், டார்ச் அடித்தும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர்.இந்நிகழ்வை எப்படி கையாள்வது என்பது குறித்து, மின் வாரியம் சார்பில் அனைத்து நுகர்வோருக்கும் எஸ்.எம்.எஸ்., அனுப்பியிருந்தனர்.