பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
11:04
ராசிபுரம்: ஆர்.புதுப்பட்டி மாரியம்மன் கோவில் விழா, ஆகம முறைப்படி நிறைவு பெற்றது. கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறுவதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராசிபுரம், ஆர்.புதுப்பட்டி மாரியம்மன் கோவில் விழா, ஊரடங்கு உத்தரவுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆகம விதிப்படி தினமும் நடக்க வேண்டிய பூஜைகள் நடந்து வந்தன. இந்நிலையில் கோவில் விழா ரத்து செய்தாலும், தேரோட்டம் நடக்க வேண்டிய தினத்தில், தேருக்கு பூஜை செய்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ராசிபுரம் சிவன் கோவில் அர்ச்சகர் உமாபதி மற்றும் புரோகிதர்கள் மூலம் சிறப்பு பூஜை செய்து கம்பத்தை எடுத்தனர். அதை வழக்கம்போல், ஊர் கிணற்றில் இறக்கிவிட்டனர். நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும், மஞ்சள் நீராடலுடன் முறைப்படி விழா முடித்து வைக்கப்பட்டது. இதில், அறங்காவலர் குழு மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.