பதிவு செய்த நாள்
12
ஏப்
2020
01:04
திருப்பதி : கொரோனா நோய் கிருமியில் இருந்து உலகத்தை காக்கும் ஸ்தோத்திர பாராயணம், திருமலையில் துவங்கியது.
தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், சுப்பா ரெட்டி கூறியதாவது:உலக மக்கள் யாவருக்கும் நல்ல உடல் நலனை வழங்க வேண்டும் என இறைவனை வேண்டி, யோகவாசிஷ்டம்-ஸ்ரீ தன்வந்திரி மகா மந்திரம் ஸ்தோத்திர பாராயணம், நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, திருமலையில் உள்ள நாதநீராஞ்ஜன மண்டபத்தில் துவங்கியது.இது, தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. உலகம் முழுதும் உள்ள பக்தர்களும், இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால், கண்ணுக்கு தெரியாத சூட்சும வடிவில் உள்ள கிருமிகளிடமிருந்து நிவாரணம் கிடைக்கும்.
அதேபோல், உலகத்தை கொடிய நோய்களிலிருந்து காத்தருளும் ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியின் ஸ்தோத்திரத்தில் வரும் ஐந்து ஸ்லோகங்கள் மூன்று முறையும், வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தில் வரும் யோகவாசிஷ்டம் என்ற பகுதியில் உள்ள தன்வந்திரி ஸ்லோகம், 21 முறையும் பாராயணம் செய்யப்பட்டது.இறுதியில், தன்வந்திரி காயத்திரி மந்திரம், ஏழுமலையான் தியானஸ்லோகம் உள்ளிட்டவையும் பாராயணம் செய்யப்பட்டன.இந்த பாராயணத்தை, தேவஸ்தான அதிகாரிகளும், ஊழியர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமர்ந்து, பாராயணம் செய்தனர். மக்களும், பக்தர்களும் தினசரி தேவஸ்தான தொலைக்காட்சியில் இதை பார்த்து, பாராயணம் செய்து கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட பிரார்த்திக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.