நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில் நடந்த ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலியில் மூன்று பாதிரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசுகிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வான ஈஸ்டர் பண்டிகை நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரேக்கியமாதா தேவாலயத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலியில் 3 பாதிரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12.௦௦ மணியளவில் தேவாலயத்தில் சிலுவை கொடியை கையில் தாங்கிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது.