பதிவு செய்த நாள்
14
ஏப்
2020
10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2019 ஏப்.,14 விகாரி ஆண்டு (சித்திரை பிறப்பு) பஞ்சாங்கம் வாசிப்பின் போது 2020 ல் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டது. அதை மெய்யாக்கும் வகையில் கொரோனா பாதிப்பு உலகை உலுக்கி வருகிறது.
சித்திரை பிறப்பான இன்று (ஏப்.,14) சார்வரி ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்ப்புத்தாண்டு சித்திரை பிறப்பை முன்னிட்டு ஆண்டு தோறும் இக்கோயிலில் பாரம்பரியமாக சுத்த வாக்கிய பஞ்சாங்கம் வாசித்து ஆண்டு கணிப்புகள் குறித்து அறிவது வழக்கம். கோயிலில் 2019 ஏப்.,14ல் விகாரி ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அப்போது, விகாரி வருஷத்தின் பலனாக, இந்தாண்டு மழை அதிகம் இருக்காது. இதில் பத்து மடங்கு கடலிலும், ஆறு மடங்கு மலைகளிலும், நான்கு மடங்கு நிலத்திலும் மழை பெய்யும். விவசாயம் நடுத்தரமாக இருக்கும். நோய் நொடிகளால் பயம் அதிகம் உண்டாகும். சம்பாதிக்க வழியின்றி இருப்பதை விற்று உண்ண வேண்டி வரும், என கணிக்கப்பட்டது. விகாரி பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்ட பலன்கள் நிறைவேறி வருவதாக ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கொரோனா நோயால் உலகம் உறைந்துள்ளது. சித்திரை பிறப்பான இன்று சார்வரி ஆண்டு பஞ்சாங்கம் இக்கோயிலில் காலை 8:30 மணிக்கு வாசிக்கப்படுகிறது. இதன் ஆண்டு பலன் சிறப்பாக அமைய வேண்டும், என அம்மன், சுவாமிக்கு தங்க கீரிடம், தங்கப்பாவாடை சாத்துப்படி செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்படவுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பக்தர்களுக்கு அனுமதியில்லை.