* செல்வம், பணம் போன்றவற்றை இழந்துவிட்டால் அவை ஒன்றும் பெரிய இழப்பல்ல. ஆனால், அறிவை இழந்துவிட்டால் அது மனிதனுக்கு பேரிழப்பாகும். * முயற்சி சரியானதாக இருந்தால் சீற்றமுடன் பாய்ந்தோடும் வெள்ளத்தையும் கடக்கலாம். ஆனால், கவலையுடன் வாழ்ந்தால் சிற்றோடையைக் கூட தாண்ட முடியாது. * சரியாகப் பேசுதல், வாய்மையை மட்டும் பேசுதல், அமைதியாகப் பேசுதல், நேரமறிந்து பேசுதல், குறிக்கோளைப் பற்றி பேசுதல் என்று பேசும் முறையறிந்து பேசுவது பயனுள்ள பேச்சாகும். * தீயவர்கள், சினம் கொண்ட கயவர்கள், பொறாமை மிக்கவர்கள், பிறர் துன்பம் கண்டு மகிழும் கீழானவர்கள் ஆகியவர்களின் நட்பு பாராட்டுவது நல்லவர்களுக்கு அழகல்ல. * புலன் உணர்வுகளின் கதவுகளைப் பாதுகாத்தபடி வாழுங்கள். விழிப்புடைய மனதைக் கொண்டு எப்போதும் எழுச்சியுடன் செயல்படுங்கள். மனோசக்தியுடன் இருந்தால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். * ஒருவன் தன் தாய், தந்தையரை அவர்களுடைய முதுமைக்காலத்தில் பாதுகாக்கத் தவறினால் அதுவே அவனது வீழ்ச்சிக்கு காரணமாக அமையும். * ஒன்றை மனதில் எண்ணி அதையே அடிக்கடி சிந்தனை செய்து கொண்டிருந்தால் அவனது உள்ளம் அதே வழியைச் சென்று அடைந்துவிடும்.