அட்லாண்டிக் கடலில் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த பயணிகளின் நேரத்தை பயனுள்ளதாக்க விரும்பினார் கப்பலின் கேப்டன். அதற்காக பயணிகளில் ஒருவரான ஆன்மிகச் சொற்பொழிவாளர் பிரடெரிக் பிரதர்டன் மேயர் என்பவரின் உதவியை நாடினார். அவரும் சொற்பொழிவாற்ற சம்மதித்தார். இதையறிந்த சகபயணிகளில் ஒருவரான அரைகுறை நாத்திகவாதி, ‘‘ஆண்டவரின் எண்ணங்களை எந்த மனிதராலும் புரிந்து கொள்ள முடியாது. அப்படியிருக்க இந்த சொற்பொழிவாளர் பேசுவதில் அர்த்தமில்லை?’’ என நண்பரிடம் வாதிட்டபடி அரைமனதுடன் சொற்பொழிவில் பங்கேற்க புறப்பட்டார். செல்லும் வழியில் ஒரு பெண் களைப்புடன் நாற்காலியில் வாய்திறந்தபடி துாங்கிக் கொண்டிருந்தாள். அப்பெண்ணின் கைகள் விரிந்தநிலையில் இருந்தன. வேடிக்கை எண்ணத்துடன், அவளைக் கண்ட நாத்திக தன்னிடம் இருந்த இரண்டு ஆரஞ்சுபழங்களை அவளது கைகளில் வைத்து விட்டுச் சென்றார். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது, ‘‘நண்பரே! ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாத உங்களைப் போன்றவர்கள் சொற்பொழிவில் பங்கேற்பதில் அர்த்தமில்லையே!’’ என கேலி செய்தார் ஒரு நபர். கோபம் தலைக்கேற, ‘‘உளறுவாயனான பிரடெரிக் என்ன பேசுகிறான் என்பதைக் கேட்பதற்காகத் தான் பங்கேற்றேன்’’ என பதிலளித்தார். சொற்பொழிவு முடிந்து இருவரும் வரும்போது, அந்த பெண் விழித்திருந்தாள். அவளது முகத்தில் ஏக மகிழ்ச்சி. அதற்கான காரணத்தைக் கேட்டார் நாத்திகவாதி. ‘‘ஐயா! கடல் பயணம் என் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. மிகவும் களைப்பாக உணர்ந்தேன். இந்நிலையில் ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே! நடுக்கடலில் பழத்துக்கு என்ன செய்வது?’’ என சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் குரல் ஆண்டவரின் காதுக்கு எட்டி விட்டதோ என்னவோ? தேடிய பொருள் உடனே கண்முன்னர் நின்றது’’ என்றாள். நாத்திகவாதியின் முகத்தில் ஈயாடவில்லை.