பதிவு செய்த நாள்
18
ஏப்
2020
12:04
தி.நகர் : சிருங்கேரி மடம் சார்பாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில், 4,000 பேருக்கு, தினமும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில், சிருங்கேரி மடம் அமைந்துள்ளது. ஊரடங்கு காரணமாக அவதிப்படும் சாலையோர வாசிகள், தொழிலாளர்கள் என, 4,000 பேருக்கு, தினமும் சிருங்கேரி மடம் சார்பாக, மதிய உணவு வழங்கப்படுகிறது. மடத்தில் தயாரிக்கும் உணவுகளை, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு, வினியோகம் செய்யப்படுகிறது. எம்.எல்.ஏ., நட்ராஜ் மூலம், மயிலாப்பூர் பகுதியில் உள்ள, 60 குடிசை பகுதி மக்களுக்கும், ஆவடி, சத்சங்கம் மூலம், ஆவடி காட்டூர், அமிர்தாபுரத்தில் உள்ள, கண்பார்வையற்ற, 500 பேருக்கும் உணவு வழங்கப்படுகிறது.தி.நகர் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள், குடிநீர் வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் உணவு வழங்கப்படுகிறது. இதில், போலீசாருக்கு, இஞ்சி, லெமன் கலந்த பழச்சாறு வழங்கப்படுகிறது. இச்சேவை ஊரடங்கு அறிவித்த நாள் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மே மாதம், 3 தேதி வரையும், அதற்கு பின் நீடித்தால், அப்போதும் தினமும் மதியம் உணவு வழங்கப்படும்.மேலும், கோடிக்கணக்கான, சிருங்கேரி மடம் பக்தர்கள், கொரோனா பாதிப்பு குறைய வேண்டும் என, தினமும் மூன்று முறை, துர்கா பரமேஸ்வரி ஸ்தோத்திரம், பாராயணம் செய்வதாகவும், சிருங்கேரி மடம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.