பதிவு செய்த நாள்
20
ஏப்
2020
12:04
தி.நகர் : சிருங்கேரி மடம் சார்பாக, தினமும், 4,000 ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில் சிருங்கேரி மடம் அமைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக, சிருங்கேரி சாரதா பீடத்தின் மஹா சன்னிதானம் ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் மற்றும் விசசேகர பாரதி சுவாமிகள், தங்களது சீடர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
அவர்களின் உத்தரவின்படி, சென்னை சிருங்கேரி வித்யாஸ்ரமத்தின் தலைவர், கிருஷ்ணமூர்த்தி அறிவுரையின்படி, பாரதி வித்யாஸ்ரம செயலர், பத்மநாபன் மேற்பார்வையில், தினமும், 4,000க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்படுகிறது. தர்மசங்கர அய்யர் ராமசந்திரன் அன்னதான குழுவை ஒருங்கிணைக்கிறார்.
மயிலாப்பூர் பகுதியில் உள்ள, 60 குடிசை பகுதி மக்களுக்கும், ஆவடி, சத்சங்கம் மூலம், ஆவடி காட்டூர், அமிர்தாபுரத்தில் உள்ள, கண்பார்வையற்ற, 500 பேருக்கும் உணவு வழங்கப்படுகிறது. இந்த சேவை ஊரடங்கு அறிவித்த நாள் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மே மாதம், 3 தேதி வரையும், அதற்கு பின் நீடித்தால், அப்போதும் தினமும் மதியம் உணவு வழங்கப்படும். இதற்காக, தன்னார்வலர்கள், தங்களால் இயன்ற பண உதவியும், பொருளுதவியும் செய்கின்றனர்.மேலும், கோடிக்கணக்கான, சிருங்கேரி மடம் பக்தர்கள், கொரோனா பதிப்பு குறைய வேண்டும் என, தினமும் மூன்று முறை, துர்கா பரமேஸ்வரி ஸ்தோத்திரம், பாராயணம் செய்வதாகவும், சிருங்கேரி மடம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.