ராமனாக அவதரித்த மகாவிஷ்ணு எல்லா உயிர்களையும் ஒன்றாக மதித்தார். ஏற்றத்தாழ்வு இன்றி வேடனான குகன், குரங்கான சுக்ரீவன், அரக்கனான விபீஷணன் ஆகியோரையும் சகோதரராக ஏற்றார். பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருந்த வேடுவப்பெண் சபரிக்கு மோட்சம் கொடுத்தார். பறவை இனத்தைச் சேர்ந்த ஜடாயுவைத் தன் தந்தையை மதித்து அந்திம கிரியை செய்தார். இலங்கைக்கு பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட அணிலைத் தன் கைகளால் வருடி நன்றி தெரிவித்தார். பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் அன்பு காட்டியதால் ராமனை ‘மனதிற்கு இனியவன்’ என ஆண்டாள் போற்றுகிறாள்.