திருச்செந்தூர்:திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது.திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 24ம் தேதி துவங்கியது. கொடை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முத்தாரம்மனுக்கு மாக்காப்பு அலங்காரமும், நேற்று இரவு அலங்காரம் மற்றும் தீபாராதனை ஆகியது. கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் இருந்து முத்தாரம்மனுக்கு தீர்த்தம், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 10 மணியளவில் முத்தாரம்மன் கோயிலிலிருந்து உச்சிமாகாளியம்மன் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலுக்கு தட்டுபிரசாதம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின் அம்மனுக்கு அலங்கார, தீபாராதனையாகி வெள்ளி அங்கிசாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். கொடை விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடமணிந்து கோயிலுக்கு வருவார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கத் தலைவர் மெய்கண்டமுத்து, செயலாளர் பரமேஸ்வரன், பொருளாளர் ஆனந்தராமச்சந்திரன் உட்பட்ட நிர்வாகிகளும், சைவ வேளாளர் இளைஞர் பேரவையினரும் செய்துள்ளனர்.