பதிவு செய்த நாள்
27
ஏப்
2020
02:04
கமுதி: கமுதி அருகே தங்கசிலை இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வி.ஏ.ஓ., உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 6 ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, ஆனையூர், முதுகுளத்துார் பகுதியில் மாந்திரீகம் பெயரில், பூமிக்கடியில் தங்க சிலைகள் இருப்பதாகவும், யாகம் நடத்தினால் கிடைக்கும் எனக்கூறி ஒரு கும்பல் மோசடி செய்கிறது. இதுதொடர்பாக ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமார் உத்தரப்படி, உதவி எஸ்.பி., விவேக், டி.எஸ்.பி.,க்கள் ராஜேஷ், மகேந்திரன் தலைமையில் போலீசார் விசாரிக்கிறார்கள். முதுகுளத்துார் செல்வக்குமார், முருகராஜ், ஏனாதியை சேர்ந்த பெண் முத்து, கீழகாஞ்சிரங்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலையாரி மகாதேவன், உடந்தையாக இருந்த தோப்படைபட்டியை சேர்ந்த புதுக்கோட்டை வி.ஏ.ஓ., செல்லப்பாண்டியும் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினார். கமுதி அருகே தோப்படைபட்டியில் புதைத்து வைக்கப்பட்ட 6 ஐம்பொன் சிலைகள், யாகசாலை பூஜைக்கான நாணயங்கள், மாந்திரீக தகடுகள், மிளிரும் அலங்கார கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.எஸ்.பி., வருண்குமார் கூறுகையில், சிலைகளின் காலம், மதிப்பு தெரியவில்லை. தொல்லியல் துறை ஆய்வு செய்ய உள்ளனர். பதுக்கப்பட்ட சிலைகள் எத்தனை என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. கைதானவர்கள் ஐம்பொன், செம்பு சிலைகளை பதுக்கி வைத்து, தங்க சிலை இருப்பதாக கூறி பணமோசடியில் ஈடுபடுகிறார்கள். யாரும் ஏமாற வேண்டாம் என்றார்.