பதிவு செய்த நாள்
29
ஏப்
2020
06:04
திருப்பூர் கிருஷ்ணன்
‘‘சுவாமி...மனிதர்களுக்கு எத்தனையோ பாக்கியங்கள் இருக்கின்றன. இவற்றில் எல்லாம் சிறந்தது எது?’’ எனக் கேட்டார் பக்தர் ஒருவர்.
‘‘ பிறருக்குச் சேவை செய்வது ஒன்றே பாக்கியங்களில் எல்லாம் சிறந்தது. சேவை செய்யாதவர் என்று யாரும் இல்லை. சேவை என்று தெரியாமல், ஒவ்வொரு மனிதரும் அவரவர் குடும்பத்திற்குச் சேவை தானே செய்கிறார்கள்? இருந்தாலும் புண்ணியம் தரும் சேவை எது தெரியுமா? நமக்கு தொடர்பு இல்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகிற்கு என சேவையை விரிவுபடுத்துவதே.
நமக்கு எவ்வளவோ குடும்ப பிரச்னை, பணியில் தொந்தரவு, உணவு, உடைக்காகப் படும் அவஸ்தை, மனக்கவலை என்றிப்படி எத்தனையோ இருக்கலாம். இதற்கு நடுவில் சமூக சேவை தேவை தானா எனக் கருதக் கூடாது. சேவை செய்வதால் சொந்தக் கஷ்டங்களை மறக்க வழி ஏற்படும். ‘ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானே வளரும்’ என்பார்கள் அல்லவா? சேவையின் பலனாக துன்பங்களில் இருந்து நம்மைக் கைதுாக்கி விடுவார் கடவுள்.
ஆனால் சேவை செய்பவர்கள், பயனற்ற பொழுது போக்குகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்காமல், சேவை செய்வதில் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும். வியாபாரம் போல லாப, நஷ்ட கணக்கு பார்க்கக் கூடாது. பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும். அதனால் பலன் பெறுபவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமக்கு மன நிம்மதியும், ஆத்ம திருப்தியும் ஏற்படும்.
சேவையில் ஈடுபட விரும்புபவர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து பணியாற்றுவது நல்லது. பலர் கூடிச் சேவை செய்யும் போது நிறைய பணிகளை திறம்படச் செய்ய முடியும்.
பெற்றோரை இழந்த குழந்தைகளை ஆதரிப்பது, ஏழைகளுக்கு உதவுவது, மிருக வதையைத் தடுப்பது, பசுக்களைப் பாதுகாப்பது என்று எதில் ஈடுபட முடியுமோ அதில் ஈடுபட்டு சேவை செய்யலாம். பசியால் வாடுவோருக்கு அன்னதானம் செய்வது மிகச் சிறப்பு. ‘யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி’ எனத் திருமந்திரம் சொல்வது இதைத் தான்.’’ என விளக்கினார். வெறுமனே பேச்சில் மட்டுமின்றி, செயலிலும் அன்பு வெளிப்பட வேண்டும். பிறர் மீது அன்பு காட்டினால் நமக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.