பதிவு செய்த நாள்
29
ஏப்
2020
06:04
லட்சுமி தாயாரின் அருளைப் பெற்ற ஆதிசங்கரர், தங்க நெல்லிக்கனி மழை பொழியச் செய்த தலம் கேரளாவில் உள்ள காலடி. ஆதிசங்கரர் அவதரித்த இங்கு அட்சய திரிதியை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆதிசங்கரர் தினமும் பிட்சையேற்று தன் குருநாதருக்கு கொடுத்த பின்னரே உண்பது வழக்கம். ஒருமுறை ஏகாதசி விரதமிருந்த சங்கரர், மறுநாளான துவாதசியன்று பிச்சைக்கு புறப்ட்டார். அயாசகன் என்னும் ஏழையின் வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த பெண்ணிடம் பிட்சை கேட்டார். உண்ண ஏதும் இல்லாததால், வீட்டில் இருந்த காய்ந்த நெல்லிக்கனியைக் கொடுத்து மகிழ்ந்தாள். அதை பெற்று மகிழ்ந்த சங்கரர், அவளது வறுமை தீர்க்க மகாலட்சுமியை வேண்டினார். அவளது வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழிந்தாள் மகாலட்சுமி.
ஆதிசங்கரர் தன் குலதெய்வமான உன்னிகிருஷ்ணர் கோயில் இவ்வூரில் உள்ளது. ஊரின் பெயரால் ‘திருக்காலடியப்பன்’ என கிருஷ்ணர் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் அட்சய திரிதியை அன்று கனகதாரா யாகம் நடத்துவர். அப்போது கனகதாரா ஸ்லோகம் சொல்லி காலடியப்பன், ஆதிசங்கரரை பக்தர்கள் வழிபடுவர்.
காலடியப்பனுக்கு வலதுபுறம் சிவன், பார்வதி, கணபதி சன்னதிகள் உள்ளன. ஆதிசங்கரர் சன்னதிக்கு அருகில் அணையா தீபம் உள்ளது. தலவிருட்சமாக பவளமல்லியும், வளாகத்தில் ஐய்யப்பனும், நமஸ்கார மண்டபத்தில் பரசுராமரும் உள்ளனர். கோயிலுக்கு அருகில் ஓடும் பூர்ணா நதியில் நீராடினால் பாவம் தீரும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கு வெண்ணெய் சாத்துகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் குழந்தையுடன் வந்து தொட்டில் கட்டுகிறார்கள்.
செல்வது எப்படி
எர்ணாகுளம் – திருச்சூர் செல்லும் வழியில் 35 கி.மீ., துாரத்தில் அங்கமாலி. அங்கிருந்து தெற்கில் 8 கி.மீ.,
‘கிருஷ்ணன் அம்பலம்’ என்றால் தான் இக்கோயிலைத் தெரியும்.
விசேஷ நாட்கள்
அட்சய திரிதியை, பிரதிஷ்டை விழா, திருவோணம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, மகர சங்கராந்தி
நேரம்
அதிகாலை 5:00 – காலை 10:30 மணி, மாலை 5:30 – இரவு 7:30 மணி
தொடர்புக்கு: 093888 62321
அருகிலுள்ள தலம்: சோட்டாணிக்கரை பகவதியம்மன்கோயில் 35கி.மீ.,