பதிவு செய்த நாள்
02
மே
2020
01:05
கோவை: கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு வரைந்த ஓவியம், நான்கு கோடியே, 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
ஈஷா யோகா சார்பில், கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவை தொண்டாமுத்துாரில், ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் இந்த பணிகள் நடக்கின்றன. இந்த பணியில், 700 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பு சேவையாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், போலீசாருக்கு தேவையான உதவிகளையும் ஈஷா செய்து தருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டும் விதமாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, முழுமையாக வாழ என்ற தலைப்பில், 5 அடி நீளம், 5 அடி அகலம் என்ற அளவில், ஒரு ஓவியத்தை வரைந்தார். அந்த ஓவியம், ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் முடிவில், ஒருவர் அந்த ஓவியத்தை, 4 கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு வாங்க சம்மதித்துள்ளார். சத்குரு கூறுகையில், “இது கொரோனா நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட நிதி. எனது ஓவியத்துக்கான விலை அல்ல. சமுதாயத்தில் வாழும் ஏழைகளின் நலனுக்காக அரசும், அரசு நிர்வாகமும் பணியாற்றி வருகின்றன. இந்த சவாலான சூழலில் யாரும் பசியால் தவிக்காமல் பார்த்து கொள்வது ஒவ்வொரு குடிமக்களின் பொறுப்பு, என்றார்.