பதிவு செய்த நாள்
05
மே
2020
12:05
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் தாராபிஷேகம் தொடங்கியது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது.
வரும், 28 வரை உள்ள இக்காலத்தில், வெப்பம் கடுமையாக இருக்கும். சிவன் கோவில்களில், உச்சிகால அபிஷேக பூஜை நடக்கும் நேரமான, 11:30 மணிக்கு தொடங்கி, சாயரட்சை பூஜை நடக்கும் நேரமான, மாலை, 6:00 மணி வரை, தாராபிஷேகம் நடத்தப்படும். இதில், பன்னீர், விளாமிச்சை வேர், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை, தாரா பாத்திரத்தில் ஊற்றி, அவற்றை, மூலவர் லிங்கத்தின் மீது சொட்டு சொட்டாக விழும்படி, தாராபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகம் நேற்று தொடங்கியது. அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனை குளிர்விக்கவும், எல்லா ஜீவராசிகளையும் பாதுகாக்க வேண்டியும், கோடையின் தாக்கம் குறைந்து, போதிய மழை பெய்ய வேண்டியும், தோஷ நிவர்த்திக்காக தாராபிஷேகம் நடத்தப்படுகிறது. இதேபோல், திருவண்ணாமலை புதுவானியங்குளம் பகுதியில் பழமையான பெரியாண்டவர் கோவில் மூலவருக்கு தாராபிஷேகம் நடந்தது.