பதிவு செய்த நாள்
05
மே
2020
12:05
திருவொற்றியூர், ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தியாகராஜ சுவாமி கோவில் பிரதோஷ வழிபாடு, யு டியூப் வழியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் பிரசித்திப் பெற்றது.
2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள், வந்து செல்வர். விசேஷ தினங்கள், திருவிழா காலங்களில், கூட்டம் கட்டுக்கடங்காது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சமூக ஒன்று கூடலை தவிர்க்கும் பொருட்டு, வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு, 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், தியாகராஜர் கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்கான தடை தொடர்கிறது. இக்கோவிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில், பிரதோஷ வழிபாடு விசேஷம். பிரதோஷ தினத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர். இம்முறை, அதற்கான வாய்ப்பில்லை என்பதால், பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சிகளை, யு டியூப் வழியாக, பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, https://www.youtube.com/channel/UC06h4eTrorI7eYw5B8aR5Ag என்ற யு டியூப் சேனல் வழியாக, இன்று மாலை, 4:30 மணி முதல், 5:30 மணி வரை, பிரதோஷ நிகழ்வுகள், நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வராமல், வீட்டிலேயே இருந்து, தியாகராஜர் பிரதோஷ வழிபாட்டை, ஆன்லைன் வழியாக தரிசிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.