பதிவு செய்த நாள்
11
மே
2020
05:05
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டதால், வாழ்வாதாரமின்றி பல குடும்பத்தினர் வருகின்றனர். உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மன்னன் ராஜராஜசோழனால், கி.மு.,1010ம் ஆண்டு கட்டப்பட்டது. உலக பாரம்பரிய சின்னமாக யுன்ஸ்கோ அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
மத்திய தொல்லியல்துறை, அரண்மனை தேஸ்வதானம் கீழ் உள்ள இக்கோவில், வெறும் வழிப்பாட்டு தலம் மட்டுமல்ல; மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு தலமாகவும் திகழ்கிறது. ராஜராஜசோழன் காலம் முதல் இன்று வரை இதற்கான பல்வேறு சான்றுக்கள் உள்ளது. கொரோனா நோய்தொற்றின் காரணமாக, கடந்த மார்ச் 18ம் தேதி முதல் மூடப்பட்ட பெரியகோவிலில், நான்கு கால பூஜைகள் நடந்தாலும், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் யாரும் வராமல், வெறுமையாக காட்சியளிக்கிறது. கோவில் பூட்டபட்டதால், பலரின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகியுள்ளது. கோவில் வாசலில் பூ வியாபாரம் செய்யும் பெண்கள், குழந்தைகளை கவரும் விளையாட்டு பொருட்கள், தஞ்சாவூர் மண்ணுக்கே பெருமை சேர்க்கும் தலையாட்டி பொம்மைகள் விற்பனை செய்யும் 35 வியாபாரிகள், கிளி ஜோதிடம், ஆட்டோ, கார் ஓட்டுநர்கள், டூரிஸ்ட் வழிகாட்டிகள், பிரசாத கடை நடத்துவோர், என பலரும், கோவில் வாசல் எப்போது திறக்கப்படும், என காத்துக்கொண்டுள்ளனர்.
இது குறித்து சரஸ்வதி மஹால் நுாலக தமிழ் பண்டிதர் மணிமாறன் கூறியதாவது: பெரியகோவிலை வெறும் வழிப்பாட்டு தலமாக கருதி, சிலர் சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றனர். ராஜராஜசோழன் இதை வெறும் கோவிலாக மட்டுமே கட்டவில்லை. மழை நீரை சேமித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் இடமாகவும் வடிவமைத்துள்ளார். பல்வேறு வர்த்தக தலமாகவும், ஓதுவார்கள், நாட்டிய பெண்கள் என 1,500 பேரின் வாழ்வாதாரமாகவும் கோவில் இருந்துள்ளது. கோவிலில் உள்ள 160 நெய் விளக்குகள் ஏற்றுவதற்கு, தனமாக வழங்கிய, 48 பசுக்கள், 96 ஆடுகளை ஆகியவற்றை, 112 ஊர்களில் உள்ள 720 பேரிடம் ஒப்படைத்தார். இதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு வாழக்கை நடத்திய குடும்பங்கள், கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கான நெய்யை கோவிலுக்கு வழங்கி வந்தன. வணிகர்களுக்கு கடன் வழங்கும் வங்கியாகவும், கோவில் நிர்வாகம் செயல்பட்டது, இதை போல தற்போதும் பெரியகோவிலை சுற்றி பலரின் வாழ்வாதாரம் இன்றளவும் செயல்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால் கொரோனாவால் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். அரசு விரைவில் கோவிலை திறக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது; இது மற்றொருவர்களுக்கு தான் கோவில், நாங்கள் ஆண்டு ஆண்டாய் இக்கோவிலை நம்பி வாழ்ந்து வருகிறோம். தலையாட்டி பொம்மைகள் ரூ.150 முதல், ரூ.250 வரையும், டான்சிங்டால் பொம்மைகள் ரூ.250 முதல் ரூ.1000 வரை விற்பனையும் செய்கிறோம். வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இதனை விரும்பி வாங்கி செல்வார்கள். ஆனால் கொரோனால் ஓட்டுமொத்தமாக முடங்கி விட்டது என்றார்.