பதிவு செய்த நாள்
23
மே
2020
04:05
திருப்பதி : திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதம், நாளை மறுநாள் முதல் பக்தர்களுக்கு கிடைக்கும் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, இரண்டு மாதங்கள் ஆகின்றன. தற்போது, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தேவஸ்தானம், ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.ஆந்திராவில் உள்ள, 13 தேவஸ்தான மாவட்ட மையங்களிலும் இந்த லட்டு விற்பனை, நாளை மறுநாள் முதல் துவங்க உள்ளது. பொது முடக்கம் காரணமாக, லட்டு விலையை, 50 ரூபாயிலிருந்து, 25 ரூபாயாக தேவஸ்தானம் குறைத்துள்ளது.இந்த லட்டு பிரசாதத்தை, 1,000த்துக்கு மேல் மொத்தமாக வாங்கி, மற்றவர்களுக்கு அளிக்க நினைக்கும் பக்தர்கள், தங்கள் பெயர், வயது, முகவரி, கைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை, ஐந்து நாட்களுக்கு முன், tmlbulkladdus@gmail.com என்ற முகவரிக்கு, மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.லட்டு பிரசாதம், ஆந்திர மாநிலத்தில் மட்டுமல்லாமல், இதர அண்டை மாநிலங்களான தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா தலைநகரங்களிலும், விரைவில் விற்பனைக்கு வரும்.லட்டு குறித்த மற்ற விபரங்களுக்கு, தேவஸ்தான, டோல் ப்ரீ எண்களான, 18004254141 மற்றும், 1800425333333ல் தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இணையதள முகவரி மாற்றம்திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய, தேவஸ்தானம், https:/ttdsevaonline.com என்ற இணையதள முகவரியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணையதளம் வாயிலாக, பக்தர்கள் ஏழுமலையான் சிறப்பு விரைவு தரிசனம், ஆர்ஜித சேவா, வாடகை அறைகள், கல்யாண மண்டபங்கள் முன்பதிவு உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து வந்தனர். இனி பக்தர்கள், https:/tirupatibalaji.ap.gov.in என்ற முகவரியை பயன்படுத்தி, தரிசன டிக்கெட் முன்பதிவு மற்றும் இதர சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இன்று முதல், இந்த புதிய இணையதளம் செயல்பட துவங்கும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.