பதிவு செய்த நாள்
27
மே
2020
10:05
அயோத்தி : அயோத்தியில், ராமஜன்மபூமி அறக்கட்டளை தலைவர், மகந்த் நிரித்யா கோபால் தாஸ், ராமர் கோவில் கட்டுமான பணியை துவக்கி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த, நவம்பர், 9ல் அனுமதிஅளித்தது. இதையடுத்து, ராமர் கோவில் கட்ட, ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற பெயரில், 15 உறுப்பினர்கள் அடங்கிய அறக்கட்டளை ஒன்றை, மத்திய அரசு, பிப்ரவரியில் அமைத்தது.இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, மார்ச் மாதம் நடந்தது. கொரோனா பரவலால், பணிகளை தொடர முடியாமல் போனது. இரு மாதங்கள் கழிந்த நிலையில், 11ம் தேதி, மண் தோண்டும் பணிகள் துவங்கின. அப்போது, ஐந்து அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் கடவுள் சிலைகள், சிற்பத்துாண்கள் ஆகியவை, உடைந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டன. மண் தோண்டும் பணி முடிந்ததையடுத்து, கட்டுமான பணிகள் நேற்று துவங்கின. அறக்கட்டளையின் தலைவர், மகந்த் நிரித்யா கோபால் தாஸ், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு செய்து, பணிகளை துவக்கி வைத்தார். அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர், சத்யேந்திர தாஸ் கூறியதாவது:அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கு, பல தரப்பிலிருந்தும், நிதி வந்துள்ளது. அதனால், கோவில் கட்டுவதில், நிதி ஒரு பிரச்னையாகவே இருக்காது. மக்கள் அளிக்கும் நிதியில், இதுவரை எங்கும் பார்த்திராத வகையில், ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.