மேட்டுப்பாளையம்: காரமடை அருகே உள்ளமருதூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீராமபிரானின் பக்தராக கரம் குவித்து, வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி அளிக்கிறார். அதனால் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமையில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று, ஆஞ்சநேயரை வழிபட்டு செல்வர். தற்போது கொரோனா ஊரடங்கை அடுத்து கோவில்களுக்கு, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆகம விதிப்படி கோவில்களில் பூஜைகள் மட்டும் நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளனர்.அதன்படி மருதூர் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் மாத சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு திருத்துழாய் சாற்றிய மேனி அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா குழுவினர் செய்திருந்தனர்.