பதிவு செய்த நாள்
08
ஜூன்
2020
12:06
திருப்பதி; திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, ஆன்லைன் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்வது, இன்று முதல் துவங்க உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், மார்ச், 20 முதல், திருமலையில் ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 80 நாட்களுக்கு பின், மத்திய, மாநில அரசுகள் உத்தரவுப்படி, இன்று முதல் தரிசனம் துவங்க உள்ளது. முதல் இருநாட்கள் தேவஸ்தான ஊழியர்களும், அடுத்த நாள் திருமலையில் வசிக்கும் உள்ளூர்வாசிகளும், சோதனை முறையில், ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வரும்,11 தேதி முதல், மற்ற பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது. பக்தர்கள், tirupatibalaji.ap.gov.in என்ற, இணையதளம் வாயிலாக, தங்கள் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். தினமும், 3,000 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்படும்.தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள், தங்களுக்கான தங்கும் அறைகளையும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவு செய்யும் போது, ஆதார் எண் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை எண் என, ஏதேனும் ஒன்றை குறிப்பிட வேண்டும். கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் சிகப்பு மண்டல பகுதிகளைச் சேர்ந்தவர்கள், தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள், ஆந்திராவிற்குள் நுழைய, இ- - பாஸ் கட்டாயம் பெற வேண்டும். டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே, அலிபிரி சோதனை சாவடிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். எஸ்.எம்.எஸ்., முறைதிருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோவில்களில், சுவாமி தரிசனம் செய்யவும், tirupatibalaji.ap.gov.in என்ற, இணைய தளம் வாயிலாக பக்தர்கள், டோக்கன் பெறலாம். அல்லது, 9321033330 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, தரிசன டோக்கன் பெறலாம். அனைத்து கோவில்களிலும், தெர்மல் ஸ்கேனிங் வாயிலாக, பரிசோதிக்கப்பட்ட பிறகே, சுவாமி தரிசனத்திற்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.தரிசனத்திற்கு செல்லும் அனைவரும், முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என, தேவஸ்தானம் தெரிவித்துஉள்ளது.