பதிவு செய்த நாள்
09
ஜூன்
2020
11:06
அயோத்தியா: அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணி, சிறப்பு பூஜைகளுடன் நாளை துவங்குகிறது என, ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் சார்பில், தகவல் தெரிவிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியின், சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி அளித்தது.
இதையடுத்து, ராமர் கோவில் கட்ட, ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற பெயரில், 15 உறுப்பினர்கள் அடங்கிய அறக்கட்டளை ஒன்றை, மத்திய அரசு பிப்ரவரியில் அமைத்தது.இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, மார்ச்சில் நடந்தது. ஆனால், கொரோனா பரவலால், பணிகளை தொடர முடியாமல் போனது. இரு மாதங்கள் கழிந்த நிலையில், கடந்த மாதம், 11ல், மண் தோண்டும் பணிகள் துவங்கின. அப்போது, 5 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டுமான பணி குறித்து, அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் மஹந்த் கமல் தயன் தாஸ், நேற்று கூறியதாவது: ராமர் கோவில் கட்டுமானப் பணி, நாளை முதல் துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு, ராம ஜன்மபூமியில் உள்ள, குபேர திலா கோவிலில், சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ராமர், இலங்கை போருக்கு செல்வதற்கு முன், சிவனை வழிபட்டு புறப்பட்டார் என்பதன் அடிப்படையில், கட்டுமான பணி துவங்குவதற்கு முன், பூஜைகள் நடத்தப்பட உள்ளன. அவை முடிந்த பின், அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.