பதிவு செய்த நாள்
09
ஜூன்
2020
11:06
திருப்பதி; திருமலையில், இரண்டு மணி நேரத்தில், 1,200 பேர் ஏழுமலையானை தரிசித்ததாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், சுப்பாரெட்டி தெரிவித்தார்.
திருமலையில் நேற்று, தேவஸ்தான ஊழியர்களை வைத்து, சோதனை முறை தரிசனம் துவங்கப்பட்டது. இது குறித்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:திருமலையில், 79 நாட்களுக்கு பின், நேற்று தரிசனம் துவங்கப்பட்டது.
தேவஸ்தான ஊழியர்கள், திருப்பதியில் உள்ள அலிபிரியில், முகக் கவசம் அணிந்து, தெர்மல் ஸ்கேனிங் முடித்து, தங்கள் உடமைகள் மற்றும் வாகனங்களை, துாய்மை செய்து, திருமலையை அடைந்தனர்.அங்கு ஏற்படுத்தப்பட்ட, இரண்டு தரிசன நுழைவாயில்களிலும், பக்தர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. பின், சமூக இடைவெளியுடன், ஊழியர்கள் தரிசனத்திற்கு சென்றனர்.ஒரு மணி நேரத்திற்கு, 500 பேர் என, அதிகாரிகள் தோராயமாக கணக்கிட்டனர். ஆனால், இரண்டு மணி நேரத்தில், 1,200 பேர் தரிசனம் செய்தனர். மூன்று நாட்கள் சோதனை முடித்த பின், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்த்தப்படும்.மேலும், தரிசனத்திற்கு செல்பவர்கள் கிரில் கம்பிகள், கதவுகள், சுவர்கள் உள்ளிட்டவற்றை தொடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தரிசன வரிசை, கோவிலுக்குள் உள்ள குடிநீர் குழாய்களில், கையால் தொடாமல், நீர் அருந்தும் விதம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பக்தர்களுக்கு அருகாமையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பி.பி.இ., கிட்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்தர்கள் கூடும் இடங்களில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, கிருமிநாசினி திரவம் தெளிக்கப்படுகிறது.கோவில் முழுதும் நேற்று மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொடர்புடைய அனைத்து கோவில்களிலும், நேற்று தரிசனம் துவங்கியது.