பதிவு செய்த நாள்
12
ஜூன்
2020
11:06
திருப்பதி: திருமலையில் நேற்று முதல் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், ஏழுமலையானை மனம் குளிர, தரிசித்து சென்றனர். திருமலையில், மார்ச், 20 முதல் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. ஜூன், 11ம் தே தியான நேற்று முதல், சாதாரண பக்தர்கள் திருமலையில் அடியெடுத்துவைத்து, ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சுமார், 83 நாட்களுக்கு பின், பக்தர்களின் நடமாட்டம், திருமலையில் ஆரம்பித்துள்ளது. 6,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வரவால் மகிழ்ந்த வருண பகவான், நேற்று காலை, சாரல் மழையால் அவர்களை குளிர்வித்தார். சிறு துாறலில் நனைந்தபடி, பக்தர்கள் சென்று ஏழுமலையானை தரிசித்து திரும்பினர். நேற்று, எட்டு மாநிலங்களிலிருந்து வந்த பக்தர்கள், ஏழுமலையானை தரிசனம் செய்து சென்றதாக, தேவஸ்தானம் தெரிவித்தது. தமிழகத்தைச் சேர்ந்த சரவணபாபு என்ற பக்தர், ‘‘83 நாட்களுக்கு பின், ஏழுமலையானை தரிசித்தது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. 20 ஆண்டுகளில் இல்லாதவாறு மிகவும் அதிக நேரம், மனமுவந்து ஏழுமலையானை தரிசிக்க முடிந்தது,’’ என்றார். தரிசனத்திற்கு வந்தவர்களுக்கு, தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடத்தில் அன்னதானம் வழங்குவது நேற்று முதல் துவங்கியது. பக்தர்கள் இடை வெளிவிட்டு அமர்ந்து, அன்னதானம் சாப்பிட்டனர்.