பதிவு செய்த நாள்
12
ஜூன்
2020
12:06
அவிநாசி: அவிநாசி அருகே உள்ள சேவூரில், 400 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சேவூர் - புளியம்பட்டி ரோடு விரிவாக்கப்பணி, சில மாதங்களாக நடந்து வருகிறது. ரோட்டின் ஓரத்தில், சிலை இருப்பதாக, நேற்று மாலை தகவல் பரவியது.
சேவூர் வருவாய் ஆய்வாளர் ராமசாமி, சேவூர் தனிப்பிரிவு பிரிவு போலீஸ் வெள்ளிங்கிரி ஆகியோர் பார்வையிட்டனர். அது, பண்டைய காலத்து நடுகல் என்பது தெரிய வந்தது. பொக்லைன் உதவியுடன், நடுகல் எடுத்து செல்லப்பட்டு, சேவூர் பெருமாள் கோவிலில், வருவாய் துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், சேவூர் போலீஸ் ஸ்டேஷன் புதுப்பிப்புப்பணி நடந்த போது, அங்கு ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வைக்கப்பட்டு வாரந்தோறும் பூஜிக்கப்படுகிறது. அந்த கல்வெட்டின் வடிவம், தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அங்குள்ள நடுகல்லை காட்டிலும் வடிவத்தில் பெரிதாக இந்த நடுகல் உள்ளது.
வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது; சேவூரில் தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள தோற்றங்களை ஆராயும்போது, கல்வெட்டின் கீழ்புறம் போர் வீரர்களின் போர்க்காட்சியும், மேற்புறம் போரில் இறந்தவர்கள் மேலோகத்தில் இறைவனை வழிபடுவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இது, கடந்த, 400 முதல், 500 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் காலத்து நடுகல்லாக இருக்கலாம். நடுகல் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.