பத்ரிநாத் கோவிலில் உள்ளூர் மக்கள் பிரார்த்தனைக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2020 11:06
பத்ரிநாத் : உத்தரகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் கிராம மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் கோவிலில் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் கோவில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற பத்ரிநாத் கோவிலில் பிரார்த்தனை செய்வதற்கு சாமோலி மாவட்டத்தை சுற்றியுள்ள மனா மற்றும் பாம்னி கிராமங்களை சேர்ந்த பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்து கொள்வது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இதனால் பக்தர்களும் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உத்தரகண்ட் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஜூன் 30 வரை கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இது தொடர்பாக கிராம பக்தர்களில் சிலர் கூறுகையில், பத்ரி விஷாலை (விஷ்ணு) வழிபட அனுமதி தந்த நிர்வாகத்திற்கு நன்றி. இந்த தொற்று நோயை சமாளிக்கவும் அதிலிருந்து காக்கவும் பத்ரி விஷாலை பிரார்த்திக்கிறோம். இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு இந்த கோயில் அவர்களின் வீடு போன்றது. இங்கே பிரார்த்தனை செய்த பிறகு நாங்கள் எங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாக என்று உணர்ந்தோம். இவ்வாறு கூறினர்.