பதிவு செய்த நாள்
12
மே
2012
12:05
நாமக்கல்: பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில், வைகாசி தேர்த்திருவிழா, நாளை (மே 13) காப்புகட்டுதலுடன் கோலாகலமாக துவங்குகிறது. நாமக்கல் நகரில், பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி திருத்தேர் பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நாளை (மே 13) காப்புகட்டுதலுடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு அன்று காலை 8.30 மணிக்கு, மோகனூர் காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுக்கச் செல்லுதல், பகல் 12 மணிக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சக்தி அழைப்பு கம்பம் நடுதல், அபிஷேக ஆராதனை, புஷ்ப அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மே 14ம் தேதி காலை 6 மணிக்கு பூச்சாட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து, மே 15ம் தேதி முதல் 26ம் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக, ஆராதனையும், இரவு 7 மணிக்கு ஸ்வாமி குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. மே 27ம் தேதி இரவு 9 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்படுகிறது. 28ம் தேதி அதிகாலை 5 மணிக்கு விசேஷ அபிஷேக அலங்காரம், காலை 7 மணிக்கு தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். அன்று இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.
மே 29ம் தேதி காலை 10 மணிக்கு அபிஷேக, ஆராதனையும், இரவு 7 மணிக்கு வசந்தோற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது. மே 30ம் தேதி காலை 8 மணிக்கு தேர் புறப்பாடு, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து மே 31ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை தினமும் காலை அபிஷேகம், ஆராதனையும், இரவு அம்மன் திருவீதி உலாவும் நடக்டறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.