பதிவு செய்த நாள்
17
ஜூன்
2020
10:06
அவிநாசி: அவிநாசி அருகே, ராமநாதபுரத்தில், நிலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளம், பரபரப்பை ஏற்படுத்தியது; இது, பழங்காலத்து தானிய கிடங்காக இருக்கலாம் என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தையொட்டி, கானூர் செல்லும் ரோட்டோரம் விவசாய நிலம் உள்ளது. இந்நிலம், பழமையான வேணுகோபால் சுவாமி கோவில் அருகேயுள்ளது.
இந்நிலத்தில், விவசாயம் செய்ய, உழவு ஓட்டப்பட்டுள்ளது. இன்று காலை, பூமியில், ஒரு அடி அகலம், 12 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இது, அப்பகுதி மக்கள் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தியது. மன்னர் காலத்து சுரங்கப்பாதையாக இருக்கலாம்; புதையல் இருக்கலாம் என்பது போன்ற பல தகவல்கள் பரவின. இதுகுறித்து, வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது; கொங்கு மண்டலம், தொல்பழங்காலம் முதல், முல்லை சார்ந்த நிலப்பரப்பாக இருந்து வருகிறது. இங்கு, புன்செய் பயிர் வெள்ளாமை முக்கியமானதாக இருந்து வருகிறது. அதன்படி, வானம் பார்த்த பூமியில் விளையும், மானாவாரி பயிர்களான, கம்பு, சோளம், கேழ்வரகு, பச்சைப்பயறு போன்றவை அதிகளவில் பயிரிடப்படுவது வழக்கம். பண்டைய கிராம மக்கள், தங்கள் விளை நிலங்களில் விளையும் தானியத்தில், ஒரு பகுதியை, கிராமங்களில் உள்ள கோவில்களுக்கு வழங்கும் மரபு இருந்து வந்தது. அக்காலத்தில், கோவில்கள் தான் கருவூலங்களாகவும், சமுதாய கூடமாகவும் செயல்பட்டு வந்தன. கோடை மற்றும் வறட்சி காலங்களில் தானியங்கள், ஊர் சபை மூலம் மக்களுக்கு வழங்கப்படும். தானியங்கள் கெட்டுப்போகாமல் இருக்க, கோவில் மற்றும் தனியார் நிலத்தின் ஒரு பகுதியில், பானை வடிவில், 5 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, சுற்றிலும் கருங்கல் அல்லது ஓடை கற்களை அரணாக அமைத்து, அதனுள் தானியங்களை சேமித்து வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர், என்பது வரலாற்றுக் குறிப்பு. இது, சோளக்குழி எனவும் அழைக்கப்பெறும். அத்தகைய தானிய கிடங்கு தான், தற்போது ராமநாதபுரம் கிராமத்தில் காண கிடைத்துள்ளது. இது, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம். இவ்வாறு, ரவிக்குமார் கூறினார்.