பதிவு செய்த நாள்
28
ஜூன்
2020
11:06
சிதம்பரம்; கொரோனா பாதிப்பால், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, கோவில் வளாகத்திலேயே சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன தரிசன விழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நேற்று நடக்கவிருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, கோவிலின் உள் பிரகாரத்தில் சுவாமி உலா சென்று, ஆயிரங்கால் மண்டபத்தில், அபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விழாவை நடத்த, 150 தீட்சிதர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், இருவருக்கு தொற்று உறுதியானது. இதனால், விழாவை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தீட்சிதர்களுடன் நடந்த பேச்சுக்கு பின், விழாவில், 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக தீட்சிதர்களின் குடும்பத்தினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. அதனால், தீட்சிதர்கள் சிலர் கண்ணீர் விட்டனர். நேற்று மாலை, ௫:15 மணிக்கு, சுவாமி தேவசபையிலிருந்து புறப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அதிகாலை, 2:00 மணிக்கு, அபிஷேகத்துடன் ஆனி திருமஞ்சன தரிசனம் நடந்தது.