பதிவு செய்த நாள்
14
மே
2012
10:05
மணப்பாறை: மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில் நேற்று காலை நடந்த பால்குட விழாவில் பத்தாயிரம் பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டு பழைமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகுச்சிறப்பாக நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் திருவிழா கடந்த ஏப்ரல் 22ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. 29ம் தேதி காப்பு கட்டுதல் விழா நடந்தது. இதைத்தொடர்ந்து தினசரி பல்வேறு சமூகத்தினர்,ல சங்கத்தினர் சார்பில் மண்டகப்படி விழாக்களும், அம்மன் பல்வேறு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ராஜவீதிகளின் வழியாக பவனி வரும் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய விழாவான பால்குட விழா நேற்று காலை நடந்தது. காலை ஆறு மணிக்கு கொடியேற்றமும், அதன் பின் ஏழு மணிக்கு ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஊர் நாட்டாண்மை கலையரசன், அறங்காவலர் வீரமணி வகையரா குடும்பத்தினர்கள் மேள, தாளங்கள் முழங்க பால்குடங்களை சுமந்து செல்ல பின்னே பக்தர்கள் பால்குடங்களை எடுத்து ராஜவீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின் அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் எடுத்துவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு ரசிகர் மன்றங்கள், இளைஞர் மன்றங்கள், சமூக அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தண்ணீர், மோர், குளிர் பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இன்று காலை பொங்கல் வைத்தல், மா விளக்கு, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், மாலை ஆறு மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் வேடபரி நிகழ்ச்சியும் தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி சுமந்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வீரமணி, செயல்அலுவலர் கவுதமன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.