பதிவு செய்த நாள்
29
ஜூன்
2020
01:06
சிதம்பரம்: கொரோனா பரவல் காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா, பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது. கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம், கொரோனா பரவல் கார ணமாக, கடந்த 19ம் தேதி 50 பேருடன் எளிமையாக நடந்தது. தேர் மற்றும் தரிசன விழாவில் 150 தீட்சிதர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், விழாவை நடத்த 10 தீட்சிதர்களுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
‘10 பேரை வைத்து விழாவை நடத்த முடியாது. சுவாமி சுமக்க 60 பேர் தேவை’என தீட்சிதர்கள் தெரிவித்தனர். பின்னர், 25 பேர் பங்கேற்புடன் நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. விழாவில், கோவிலுக்குள் தேவசபையில் எழுந்தருளிய நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. மாலையில் மேலும் சில தீட்சிதர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் உள்ளே சென்று, சுவாமியை ஆயிரங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளச்செய்தனர். நேற்று அதிகாலை3.௦௦ மணியளவில் அபிஷேகம் துவங்கியது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கட்டளைதாரர்கள் வழங்கும் பூஜை பொருட்கள் அதிகம் வராததால், அபிஷேகத்திற்கு குறைவான பொருட்களே கொண்டு செல்லப்பட்டது. வழக்கமாக, நடராஜருக்கு 5 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறும். நேற்று 500 லிட்டர் பாலில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. மாலை 4.15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பாடு துவங்கியது. நடராஜரும், சிவகாமசுந்தரியும் நடனமாடியபடியே சித்சபைக்கு சென்றனர். கீழ சன்னதியில், தீட்சிதர் குடும்ப பெண்கள், மூடப்பட்ட கோவில் கதவின் அருகில் நின்று சுவாமியை தரிசித்தனர். சுவாமியை தரிசிக்க முடியாவிட்டாலும், சுவாமி நடனமாடி செல்லும் போது ஒலிக்கப்படும் சிகண்டி மணியோசை, தாள ஓசையை கேட்டாலே போதும் என கீழவீதியின் கோவில் வாயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.